புது வருடம்; புதிய நாம்

 மற்றுமொரு அழகிய ஆண்டு தொடங்கியுள்ளது, ஆண்டு முழுவதும் எவ்வளோ போராட்டங்கள் இருந்தாலும் புதுவருடத்தை எப்பொழுதும் ஒரு உற்சாகத்தோடுதான் வரவேற்கிறோம். மாறுவது என்னவோ தேதி மட்டுமே ஆனால் புது ஆண்டு நமது வாழ்வை மாற்றும் என்று நாம் நம்புகிறோம். ஆனால் மாற்றம் என்பது நம்முள் இருப்பது. ஒவ்வொரு ஜனவரியிலும், நம்மில் பலர் புதிய வருட தீர்மானங்களில் தொடங்குகிறோம் — ஜிம் உறுப்பினர் சேர்க்கை, ஆரோக்கியமான உணவு, யோகா, அதிகாலையில் எழுதல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும், அந்த தீர்மானங்களில் பெரும்பாலானவை சில வாரங்களுக்குள் மங்கிவிடுகின்றன. அது ஒரு நகைச்சுவை போலவே ஆகிவிட்டது.

உண்மை என்னவென்றால் வாழ்நாள் பழக்கத்தை, தேதி மாறிவிட்டது என்பதற்காக, ஒரே இரவில் மாற்ற முடியாது. மாற்றம் நிச்சயமாக சாத்தியம் — ஆனால் அது படிப்படியாகத்தான் நடக்கும்; ஓர் இரவு அதிசயங்களால் அல்ல.

நீங்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றால், முதலில் 30 நிமிடம் முன்னதாக எழத் தொடங்குங்கள்.

உடலைத் தகுதியாக்க வேண்டும் என்றால், தினமும் 30 நிமிட நடைப்பயிற்சியிலிருந்து தொடங்குங்கள். இரு வாரம் கழித்து அதை 45 நிமிடமாக உயர்த்துங்கள். நம்பிக்கை வந்ததும், ஜிம் செல்ல முயற்சி செய்யலாம் — ஒரு வருடத்துக்கு முன்பணம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒரு மாத உறுப்பினர் சேர்க்கையிலிருந்து தொடங்கலாம்.

ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்றால், ஒரு வேளை உணவை மட்டும் மேம்படுத்துவதிலிருந்து தொடங்குங்கள். பின்னர் மெதுவாக விரிவாக்குங்கள். வெளியே சாப்பிடுவதை குறையுங்கள். உங்கள் மீதான நம்பிக்கையை, நான் இதை தொடர்ந்து செய்வேன் என்ற உறுதியை உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முயற்சியையும் சிறு சிறு படிகளாக மாற்றுங்கள். சிறிய முன்னேற்றங்களையே கொண்டாடுங்கள்.   சிறிய பழக்கங்கள், சின்ன சின்ன முயற்சிகள் பெரிய மாற்றங்களை நம்மில் ஏற்படுத்தும். ஒரு  புதிய தேதி வருவதற்காக அல்லது ஒரே இரவில் அதிசயம் நடக்க இனி காத்திருக்க வேண்டாம்.

உங்களுக்கே சொல்லுங்கள்: என்னால்  முடியும். என்னால் மாற முடியும். என்னால்  நினைத்ததை சாதிக்க முடியும்.

உண்மையான, நிலையான, மகிழ்ச்சியான மாற்றங்கள் நிறைந்த ஒரு ஆண்டாக, 2026ல் நிதானமாக, உறுதியாக பயணிப்போம்.

Comments

Popular posts from this blog

நம்மில் ஒரு குரல்- A Voice Within Us

தோல்வியின் கதை-The Journey Through Failure

சேமிப்பது நல்லதல்ல-Savings is not good