உன்னில் தொடங்கும் உலகம்
முந்தைய பதிவில் பெண்கள் அவங்களோட உடல்நலம், மனநலம் பாதுகாப்பது பற்றி பேசினோம். அதுல இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்று பார்ப்போம். பெண்களுக்கு வரும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆண்களை காரணம் சொல்லும் வழக்கம் உண்டு. அது உண்மையா? அனைத்திற்கும் காரணம் ஆண்களா? அது பாதி உண்மைதான்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
இந்த பழமொழியை பல இடங்களில் நம்ம கேட்டிருப்போம். நமக்கு நடப்பவைகளுக்கு முழு முதல் காரணம் நாம் தான். பெண்களுக்கும் அப்படித்தான் நிறைய தேவையற்ற பிரச்சனைகளை நாம் தான் இழுத்து கொள்கிறோம். ஆனா இந்த பதிவுல நம்ப பிரச்சனைகள் பற்றி பேசப்போவது இல்லை, நமக்கு நம்ம செய்யக்கூடிய மூன்று முக்கிய நன்மைகளை பற்றி பேசப்போறோம்.
உன்னை நேசி:
எவ்வளோ பேருக்கு உங்கள உங்களுக்கு பிடிக்கும். எந்த ஒப்பீடும் இல்லாமல் இருக்குறது இருக்குற மாதிரி உண்மையான உங்களை உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும்? உங்களை நீங்களே பாராட்டிக்கிட்டது உண்டா? எப்பவும் மத்தவங்க நம்மை பாராட்டனும், அங்கீகரிக்கனுனு தான் எதிர்பாக்கிறோம், நம்மை நாம் முழுசா ஏத்துக்கிட்டு இருக்கோமா? பெரும்பாலும் இந்த கேள்விகளுக்கு இல்லைதான் பதிலாக இருக்கும். நமக்கு தும்மல் வந்தா பக்கத்துலயிருக்க யாராவது 100 ஆயுசுனு சொல்லுவாங்க, வெளிநாடுகளில் (Bless you) சொல்லுவாங்க.
என்னோட தோழி ஒருத்தங்க அவங்களுக்கு தும்மல் வந்தபோது அவங்களுக்கு அவங்களே (Bless me) சொல்லிக்கிட்டாங்க. அது எனக்கு ஆச்சரியம இருந்துச்சு. நமக்கு நாமே ஏன் அதை சொல்லிக்குறது இல்லை. நமக்கே எப்படி நாம் அப்படி சொல்லிக்குறதுனு உங்களுக்கு தோணலாம், ஏன் சொல்லக்கூடாது நல்ல வார்த்தை, நேர்மறையான வார்த்தை சொல்றதுல என்ன தப்பு. நமக்கு நாமே பாராட்டிக்குறது, நம்மீது நாமே அன்போடு இருப்பது, நம்மை நாம் ஏற்றுக்கொள்வது, இதை நாம் பயிற்சி செய்ய தொடங்கின அடுத்தவங்க வார்த்தைகள், விமர்சனங்கள் நம்மை பாதிப்படைய செய்யாது. எதுவானபோதும் நமக்கு நாம்தான் முதல் தோழன்.
காலைல எழுந்ததும் கண்ணாடி பார்த்து இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டுனு உங்களுக்கே சொல்லிக்கோங்க,
ஒரு பரபரப்பான நாளுக்கு பிறகு படுக்க செல்வதற்கு முன், இன்னைக்கு எவ்வளோ வேலையெல்லாம் முடிச்சாச்சு, சும்மா சொல்லக்கூடாது கலக்குற நீன்னு, உங்களுக்கே சொல்லிக்கோங்க.
ஒரு வெற்றிக்கு பிறகு, ஒரு தோல்விக்கு பிறகு, ஒரு அழகிய கோலம் போட்ட பிறகு, அருமையான சமையலுக்கு பிறகு உங்களை பாராட்டும், அரவணைக்கும் முதல் ஆள் நீங்கள இருங்க.
உன்னை கவனி:
அடுத்து பெரும்பாலான பெண்கள் கவனிக்க தவறுவது அவங்க உடல்நலம். ஒரு பாதிப்பு வரவரைக்கும் அதுமேல் நமக்கு கவனம் வருவதே இல்லை. இன்னைக்கு இருக்க உலகத்தில் நிறைய கலப்படங்கள், இயற்கையை விட்டு விலகிக்கொண்டே இருக்கோம், பேர் தெரியாத வியாதிகள் நம்மை தாக்குகின்றன. ஒரு நுண்ணுயிரி நம் அனைவரையும் வீட்டு சிறையில் வைத்தது. அதுக்காக எப்போதும் பயத்தோடு இருக்கசொல்லல, கவனமாக இருங்க. தினமும் உங்களுக்குனு ஒரு அரைமணி நேரம் ஒதுக்குங்கள், ஒரு சிறு நடைபயிற்சி, கொஞ்சம் கையகாலை நீட்டி மடக்கி, ஒரு பத்து நிமிஷம் அமைதியாக அமர்ந்து நம்முள் அனைத்தும் சரியாக இருக்கிறத என்று கேட்டுக்கொள்ளுங்கள். நம்ம உடலும் ஒரு இயந்திரம் மாதிரி தான் அப்ப அப்ப அதுக்கான பராமரிப்பை சரியாக செய்திடனும்.
உன்மீது மதிப்புகொள்:
நீங்கள் குடும்ப தலைவியாக இருக்கலாம், வேலைக்கு செல்பவராக இருக்கலாம், தொழில் செய்பவராக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் உங்களுக்கு உங்கள் மீது மதிப்பு இருப்பது அவசியம். எனக்கு எதுக்கு வீட்டுல தானே இருக்க, அவருக்கும் பசங்களுக்கு இருந்தாபோதும் நான் சமாளிச்சுப்பேனு எப்பவும் பொறுத்து போற பழக்கம் நமக்கு உண்டு. விட்டுக்கொடுத்து போகலாம் ஆனால் அதுக்காக நமது சுயமரியாதையை விட்டுக்கொடுத்து போக கூடாது. நமக்கு நம்மீது மரியாதை இருப்பது மிகவும் அவசியம் என்னவானாலும் சில விஷயங்களில் தாழ்ந்து போகமாட்டேன் என்பதில் நீங்க உறுதியாக இருக்கனும்.
உங்கள் உலகம் உங்களில்தான் தொடங்குகிறது, அந்த உலகில் உங்களுக்கு நீங்கள்தான் மையம். உங்களை நேசியுங்கள், கவனியுங்கள், மதிப்போடு முன்னேறி செல்லுங்கள்.
Comments
Post a Comment